உப்புதேசத்தில் ஓர் உலா

"இங்க இருக்கற லைட்ஹவுஸ் மேலிலிருந்து பைனாகுலர் மூலமா பார்த்தா நைட்டுல இலங்கையில லைட் எரியறதெல்லாம் தெரியும்னு சொன்னாங்க ஸார்... நான் ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். மினுக்கட்டான்பூச்சி மின்னிமின்னி வட்டமிடுமே... அதுமாதிரி அங்க ஒண்ணும் இங்க ஒண்ணுமா தெரிஞ்சது. அது இலங்கையான்னு தெரியலை. ஆனா, அங்க ஆர்மிகாரங்க போடுற குண்டுச் சத்தம் மட்டும் தெளிவா கேட்கும். இன்னும் வடமேற்குப் பக்கமா காத்து வீசினா காதுக்குப் பக்கத்துல வெடிக்கறது மாதிரி இருக்கும் ஸார்'' - கோடியக்கரையில் நம்மோடு வந்த வன இலாகா கைடு பக்கிரிசாமிதான் மேற்கண்டவாறு சொன்னார்.



நல்ல நீச்சல் பயிற்சியும், மனசுல தெம்பும் இருந்தா இங்கேயிலிருந்து இலங்கைக்கு நீந்தியே போயிடலாம் (48 கிலோ மீட்டர்தான்) என்பது அவரது நம்பிக்கை. பிற்காலச் சோழர்கள் காலத்திலிருந்தே வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கோடியக்கரையில் ராமாயணக் காலத்தோடு தொடர்புடைய சில இடங்களும் இருப்பது, ஆச்சர்யப்பட வேண்டிய உண்மை. இந்த ஊரின் இன்னொரு சிறப்பு. மூன்று பக்கமும் நீர் (மேற்கே சதுப்பு நிலங்கள் ; தெற்கே பாக் ஜலசந்தி; கிழக்கே வங்கக் கடல்) ஒரு பக்கம் நிலம் (உப்பளங்கள்). ஆக, ஏறக்குறைய குட்டி தீபகற்பம். கடலும் காடும் கைகோக்கிற இடத்தில் ஆங்காங்கே உடலில் ஒட்டியிருக்கும் மச்சங்கள் போல குட்டிக் குட்டிக் திட்டுகள். (ஆவலாக பக்கிரிசாமியிடம் அந்தத் திட்டுகளின் பெயர்களைக் கேட்டோம். ரொம்பவும் கூலாக, "அதெல்லாம் யாருக்கு ஸார் தெரியும்!' என்றார்.)





எங்கே இருக்கு : வேதாரண்யத்திலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர். சரியாக அரைமணி“ நேரப் பயணம். காரில் சென்றால்தான் இலகுவாக இருக்கும். கண்டிப்பாக கார் கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டால்தான், இரண்டு பக்கங்களிலும் வெள்ளிக்கம்பளமாக விரிந்து கிடக்கும் உப்பளங்களைப் பார்க்க முடியும். கையில் வாருகோலை வைத்துக்கொண்டு தொழிலாளர்கள் உப்பை வாரிக்கொண்டும், சின்னச் சின்ன பாக்கெட்டுகளில் உப்பை நிரப்பிக் கொண்டும் இருக்கிறார்கள்.





ஆங்காங்கே குவியல்குவியலாகக் குவிக்கப்பட்டிருக்கும் உப்புக்கற்களில் சூரியன் பட்டுத் தெறிக்கையில் கண்களுக்குள்ளும் பிசுபிசுப்பு ஒட்டிக்கொள்வதை உணரலாம். ஆண் தொழிலாளர்கள் உப்பு மூட்டையை லாரிகளில் அடுக்கிக்கொண்டிருந்தனர். யாருக்குத் தெரியும்...? அந்த உப்பு மூட்டையின் ஒரு பிடி நாளை நம் வீட்டுக்கு வந்தாலும் வரலாம். பீகார், உத்தரப்பிரதேசம், கேரளாவிலிருந்துதான் அதிகமானோர் உப்பளங்களில் வேலை பார்க்க வருகிறார்களாம். தூத்துக்குடியைப் போல வேதாரண்யத்தில் கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுப்பதில்லையாம். எண்பது சதவிகிதம் நிலத்தடி நீர்தானாம்.





நிலத்தடி நீரை வெளியே கொண்டு வருவதற்கான பிரத்யேக பம்பிங் ஸ்டேஷன்களும் இருக்கின்றன. நாம் சென்றிருந்தது மதிய நேரம் என்பதால் காற்றில் பிசுபிசுப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. காற்றை நுரையீரல் ஆழம் வரை இழுத்துச் சுவாசித்துப் பாருங்கள், சற்றுக் கூடுதலாகக் கரிக்கிறதா...? அப்பாடா... கோடியக்கரையை நெருங்கிவிட்டோம். அதற்கு முன்பு ஒரு முக்கியமான இடத்தைச் சொல்லியாக வேண்டும். அது... ராமர் பாதம்.





ராமர் பாதம் : வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை போகிற வழியிலேயே மூன்றாவது கிலோமீட்டரில் இருக்கிறது ரா மர் பாதம். அயோத்தியில் பிறந்தார் ராமர். பாதம் மட்டும் இங்கே எப்படி? குழப்பமாக இருக்கிறதா...? சீதாதேவியை ராவணன் கடத்திக்கொண்டு வந்துவிட்டான் என்று ராமருக்குத் தெரிய வந்ததும், சீதாவை மீட்டு வருவதற்காக வேதாரண்யம் வருகிறார். பிறகு எங்கே போவதென்று தெரியவில்லையாம்.





பிள்ளையாரிடம் கேட்கிறார். அவர், "தென்கிழக்காகப் போனால் ஒரு மணல்மேடு வரும். அங்கிருந்து பார்த்தால் ராவணன் கோட்டை தெரியும்' என்று விரல் காட்டுகிறார். ராமர் நடந்து சென்ற சாலை இன்றளவும் சேது ரஸ்தா என்றழைக்கப்படுகிறது. ராமருக்கு வழி காட்டிய பிள்ளையார், சேது ரஸ்தாவில் அமர்ந்தகோலத்தில் ஆட்காட்டிவிரலை நீட்டியபடி இப்போதும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். "ராமர் பாதம் - தமிழ் நாடு வனத்துறை' நம்மை வரவேற்கிறது. ஒவ்வொரு படியாக ஏறிச் சென்றால் கிட்டத்தட்ட இருபத்தைந்து அடி உயரத்தில் இருக்கிறது ராமர் பாதம்.





சிமெண்டால் ஆன மணிமண்டபத்தின் கீழ் பாறையில் வடிக்கப்ப்பட்டிருக்கிறது. ராமனை விட்டு எப்போதும் பிரியாத லட்சுமணன் பாதம் எங்கேயாவது அருகில்தான் இருக்குமென்று மனம் தேடத்தொடங்கியது. மனம் தேடத் தொடங்கினால் முடிவேது? இங்கிருந்து ராமன் பார்க்கும்போது ராவணன் கோட்டையின் பின்புறம் தெரிந்ததாம். ஒரு வீரன் பின்புறமாகச் சென்று தாக்குவது வீரமாகாது என்றுதான் ராமேஸ்வரம் சென்று கோட்டையின் முன்புறமாகத் தாக்கினாராம். மணல்மேட்டிலிருந்து முப்பதடி உயரத்தில் இருக்கும் வியூ டவர் மீது ஏறிப் பார்த்தோம். கண்ணுக்கெட்டிய தூரம் மட்டும் கடலும், புதர்க்காடுகளுமே தெரிந்தனவே தவிர இலங்கையோ ராவணன் கோட்டையோ தெரியவில்லை. நம் நோக்கம் ராமர் பாதத்தைப் பார்பதன்றி, ராவணன் கோட்டையை பார்ப்பதல்ல என்று நினைவுக்கு வர, கீழறங்கி வந்து பாதத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டோம். இப்போது கார் சென்று நின்ற இடம் வனவிலங்குகள் சரணாலயம்.





வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் : இங்குதான் ஆரம்பத்தில் பேசிய பக்கிரிசாமி நம் காரில் ஏறிக்கொண்டார். கோடியக்கரை காடு கிட்டத்தட்ட இருபத்தைந்து சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாம். வனத்துறையினர் காட்டை மூன்று வகையாகப் பிரித்திருக்கின்றனர். புதர்க்காடுகள், அடர்காடுகள், மூலிகைவனம். முதலில் நாம் புதர்க்காட்டின் வழியாகத்தான் காட்டின் உள்ளே பிரவேசிக்க முடியும். இங்கிருந்து ஆரம்பித்து காட்டின் உள்ளே நான்கைந்து கிலோமீட்டருக்கு, கடற்கரை வரை மண்சாலை போட்டிருக்கிறது வனத்துறை.





சாலையில் போகும் போது, தூரத்தில் காட்டுக்குதிரையும், பக்கத்தில் வெளிமான்களும் மேய்ந்துகொண்டிருந்தன. இந்தக்காட்டின் ஸ்பெஷலே வெளிமான்கள்தானாம். உலகளவில் அழிந்து வரும் இந்த வகை மான்கள் இங்கே இரண்டாயிரத்துக்கும் மேல் இருக்கின்றனவாம். புள்ளிமான்கள் ஐந்நூறு ப்ளஸ் இருக்குமாம். கூடவந்த நண்பர், ""குள்ளநரி இருக்காங்க?'' ன்னு கேட்டார். பக்கிரிசாமி, ""நாட்டுக்குள்ள இருக்கற அளவுக்கு, காட்டுக்குள்ள கிடையாது ஸார்!'' என்று டயலாக்க கலகலப்பானது கார். கொஞ்ச தூரம் சென்றதும் காட்டுப்பன்றி காரை உரசியபடி குறுக்கே போனது. டிரைவர் பதறியபடி காரை நிறுத்திவிட்டு, ""வாகனத்தில் பன்றி மோதக்கூடாது ஸார்'' என்று காட்டில் சகுனம் பார்த்தார்.





புதர்க்காட்டின் தொடர்ச்சியாக மூலிகைச் செடிகள் இருக்கின்றன. 317 வகையான மூலிகைச் செடிகளில் 150 வகை, உலகில் வேறெங்கும் கிடையாதாம். கடலும் காடும் அருகருகே இருப்பதால் இங்கே நிலவும் தட்பவெப்ப நிலைகள்தான் மூலிகைச்செடிகள் வளர்வதற்குக் காரணமாம். மோதிரக்கண்ணே, கோவைபிரண்டே, சிறுவாகை, காட்டுக் கொய்யா, குமுளை... போன்றவை முக்கியமான மூலிகைகள். அரிய மூலிகை வகைகள் இருக்கறதுனால இங்கே அரசாங்கம் மூலிகை ஆராய்ச்சி அமைத்தால், நல்லா இருக்கும்னு நம் மனசுக்குத் தோணிச்சு. அரசாங்கத்துக்குத் தோணணுமே. வேடந்தாங்கலுக்கு அடுத்தபடியாக வெளிநாட்டுப் பறவைகள் அதிகம் வருவது கோடியக்கரைக்குத்தானாம். சீஸன் நவம்பர் டூ பிப்ரவரி. கார் சத்தம் கேட்டதும் அருகே தீனி பொறுக்கிக் கொண்டிருந்த காட்டுக்கோழி ஒன்று பறந்துசென்று லைட் ஹவுஸ் மேல் உட்கார்ந்தது.





கலங்கரை விளக்கம் : மொத்தம் மூன்று லைட் ஹவுஸ்கள் உள்ளன, கோடியக்கரையில். ஒன்று பாரந்தகசோழன் காலத்தில் கட்டப்பட்டது. இரண்டாவது, 120 வருஷத்துக்கு முன்னாடி பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்தது. கடைசியா, 180 அடி உயரம் கொண்ட ஒரு லைட் ஹவுஸுக்கு. அமரர் கல்கி வாசகர்களுக்கு இது படு பரிச்சயம். அவர் வந்தியத்தேவனையும், பூங்குழலியையும், உலவவிட்ட இடம். இங்கிருந்துதான் ராஜராஜசோழன் இலங்கைக்குப் படை நடத்திச்சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 1200 வருஷங்களுக்கு முற்பட்ட அந்த லைட் ஹவுஸ் இன்றைக்கு உடைந்து சிதிலமடைந்து கிடக்கிறது.





அதுவும் சுனாமிக்குப் பிறகு இன்னும் மோசமாகிவிட்டதாம். நமக்கு பழைமையைப் பாழ்படுத்தி பார்ப்பதில்தானே அதிக ஆசை. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட லைட் ஹவுஸை ஃபோட்டோ எடுக்க மட்டும்தான் அனுமதி. 180 அடி உயரம் கொண்ட மூன்றாவது லைட் ஹவுஸ் கோடியக்காடு ஊரை ஒட்டி இருக்கிறது. தமிழகத்திலேயே உயரமான லைட் ஹவுஸ் இதுதானாம். (இங்கிருந்துதான் நம் பக்கிரிசாமி இலங்கையைப் பார்த்தாராம்.) அதன் மேல் ஏறிப் பார்க்கும்போது நம்மை குழகர் கோயில் கோபுரம் "வா'வென்று அழைக்கிறது.





குழகர் கோயில் : மிகப் பழமையான சிவன் கோயில். காலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிவன் அமிர்தகுழகேசுவராக அருள்பாலிக்கிறார். சுப்ரமணியசுவாமி தன் குடும்பத்தோடு இங்கு குடியமர்ந்துள்ளார். சோழர்கள் காலத்தில் கல் திருப்பணி நடந்திருக்கிறது. 1940ல் ஒருமுறை குடமுழுக்கு நடந்திருக்கிறது. அதன் பிறகு இப்போது குடமுழுக்கு நடைபெற கடந்த இரண்டு வருடங்களாக கோயில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.





கடிதாயக் கடற்காற்று





வந்தேற்றக் கரைமேல்





குடிதானயலே இருந்தாற்





குற்றமாமோ?





கொடியேன் கண்கள்





கண்டன கோடிக் குழகீர்





அடிகேள் உமக்கார்





துணையாக இருந்தீரே?





-என்று ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வந்து குழகரைப் பாடியிருக்கிறார். ஆனால், இப்போது கோயிலைச் சுற்றி கிட்டத்தட்ட இரண்டாயிரம் குடும்பங்களுக்கு மேல் இருக்கின்றனவாம். தரிசனம் முடித்துவிட்டு நாகைக்கு காரில் திரும்புகையில் நம்மைக் கேள்வியாக குடைந்தவற்றைக் கீழே தருகிறோம்!





கேள்விகள் பத்து!



1 பயணிகள் கோடியக்கரையில் வந்து தங்கிச் சுற்றிப்பார்க்க விடுதி எப்போது அமைப்பார்கள்?





2 உயரமான வியூ டவர் இல்லையே ஏன்?





3 வேதாரண்யத்திலிருந்து அகலமான சாலை வசதி வருமா?





4 கோடியக்கரை காடு உயிரியல் பூங்காவாகாதா?





5 கடலில் உல்லாசமாகச் சென்று வர படகுச் சவாரி கனவுதானா?





6 கோடிக்கரை காட்டைப் பற்றி புத்தகக் குறிப்புகள் ஏனில்லை?





7 மின்சார வசதி எப்போது சாத்தியம்?





8 பூங்காங்கள் மலராதா...?





9 நல்ல மீன்காட்சி சாலை அமைக்கும் யோசனை அரசாங்கத்துக்கு இருக்கா?





10 கடல்சார் தொழிற் சாலைகள் ஏன் அமையவில்லை....?





நாகை வந்து இறங்கும் வரை நமக்கு விடை கிடைக்கவில்லை. எத்தனை காலத்துக்கு கேள்விகள் கேள்விகளாக இருக்கப்போகின்றன என்ற கேள்வியோடு தான் இந்தப் பயணக் கட்டுரையை முடிக்க வேண்டி இருக்கிறது!

நன்றி நன்றி நன்றி

ஜானகிராமன், வேதாரண்யம்

http://www.dinamalar.com/Supplementary/kalki_detail.asp?news_id=166&dt=10-28-09

கோடியக்கரை வனஉயிரின உய்விடம்

கோடியக்கரை வனஉயிரின உய்விடம்

இந்த ஊரின் இன்னொரு சிறப்பு. மூன்று பக்கமும் நீர் (மேற்கே சதுப்பு நிலங்கள் ; தெற்கே பாக் ஜலசந்தி; கிழக்கே வங்கக் கடல்) ஒரு பக்கம் நிலம் (உப்பளங்கள்). ஆக, ஏறக்குறைய குட்டி தீபகற்பம். கடலும் காடும் கைகோக்கிற இடத்தில் ஆங்காங்கே உடலில் ஒட்டியிருக்கும் மச்சங்கள் போல குட்டிக் குட்டிக் திட்டுகள்

வேதாரண்யத்திலிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர். சரியாக அரைமணி“ நேரப் பயணம். காரில் சென்றால்தான் இலகுவாக இருக்கும். கண்டிப்பாக கார் கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டால்தான், இரண்டு பக்கங்களிலும் வெள்ளிக்கம்பளமாக விரிந்து கிடக்கும் உப்பளங்களைப் பார்க்க முடியும். கையில் வாருகோலை வைத்துக்கொண்டு தொழிலாளர்கள் உப்பை வாரிக்கொண்டும், சின்னச் சின்ன பாக்கெட்டுகளில் உப்பை நிரப்பிக் கொண்டும் இருக்கிறார்கள்.


கோடியக்கரை வனஉயிரின உய்விடம் 1967ஆம் ஆண்டு கலைமான்களைக்காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும். இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குகாணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரியபறவையினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்றவிலங்குகளையும் காணலாம். இங்கு ஆங்கிலேயர்கள் விட்ட வளர்ப்புக்குதிரைகள் நாளடைவில் காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டன. இத்தகையகுதிரைகள் இங்கு மட்டுமே காணப்படுகின்றன. இங்கு 1000 ஆண்டுகளுக்குப்பழமையான சோழர் காலத்து கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையில்காணப்படுகிறது.

இங்கு காணப்படும் விலங்குகள்
  • கலைமான்
  • நரி
  • புள்ளி மான்
  • காட்டுப்பன்றி
  • முயல்
  • காட்டுக் குதிரைகள்
  • குரங்கு
இங்கு செல்வதற்கு சாலை வழி
  • நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும்,
  • தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இங்கு செல்வதற்கு ஏற்ற காலம்
  • நவம்பர் முதல் ஏப்ரல் வரை மிகவும்








வேதாரண்யம் உப்பு சத்தியா கிரகம்

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்

உப்பு சத்யாகிரகம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற் றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும். அண்ணல் காந் தியடிகள் தண்டியாத்திரையும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் வேதாரணியம் உப்பு யாத்திரையும் மேற்கொண்டு இந்த 2005 ஆண்டோடு 75 ஆண்டுகள் நிறைவு பெறு கின்றன.

தமிழகத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் தளபதி சர்தார் வேதரத்னம் முன்னின்று நடத்திய வீர வரலாறு தான் வேதாரண்யம் உப்பு யாத்திரை. நூறு ஒழுக்க சீலர்கள் இந்த அஹிம்சைப் போரில் கலந்துகொண்டார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் திரு.ஏ.என். சிவராமன் (தின மணி ஆசிரியராக இருந்தவர்), திரு.ஜி. ராமசந்திரன், திரு. துரைசாமி, கல்கி சதாசிவம், கோயம்புத்தூர் ராஜ÷, கோவை ஜி.கே. சுந்தரம், ஒ.வி. அளகேசன், வெங்கட்ராமன், கே. சந்தானம், மட்டப்பாறை வெங்கட்ட ராமையா இன்னும் பலர்.1929 இல் லாகூரில் காங்கிரஸ் மாநாடு கூடியது. பூரண சுதந்திரமே லட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்த லட்சியம் கை கூடுவதற்காக எந்த மாதிரி கிளர்ச்சி நடத்தலாம் என்று யோசனை கூறும் பொறுப்பு காந்திஜிக்கு விடப்பட்டது

ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 4 மணிக்கு குறிப்பிட்ட சிலரோடு ராஜாஜி உப்பை அள்ளிச் சென்றுவிட்டார்.டெபுடி கலெக்டர் பொன் னுசாமிப் பிள்ளை, கோவிந்த மேனன் மற்றும் இன்ஸ் பெக்டர்கள் போலீஸ்காரர்கள் ராஜாஜி வருகைக்காகக் காந் திருந்த போது, வேறுவழியாகச் சென்று தன் மதிநுட்பத்தால் ராஜாஜி உப்பை அள்ளி வந்து விட்டார். ""காந்திக்கு ஜெ! வந்தே மாதரம்'' கோஷங்கள் எழுப்பப் பட்டவுடன் ராஜாஜியும் வேறு சிலரும் கைதாகி 6 மாத சிறை தண்டனை அனுபவித்தார்கள்.

வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும்

வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும்

வேதாரண்யம் (ஆங்கிலம்:Vedaranyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகபட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வேதாரண்யம்/திருமறைக்காடு வேதாரண்யநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வேதங்களால் அடைக்கப்பட்ட கதவும் திறக்கவும் மூடவும் சம்பந்தரும் அப்பரும் பதிகம் பாடினர் என்பது தொன்நம்பிக்கை. சேரமான் பெருமாள் சுந்தரருடன் வழிபட்ட தலம் எனப்படுகிறது

உப்பு சத்யாகிரகம்

காந்தியடிகள் தண்டியில் உப்பு சத்யாகிரக யாத்திரை நடத்திய போது அதற்கு இணையாக தமிழகத்தில் மட்டுமே வேதாரண்யத்தில் ராஜாஜியும், சர்தார் வேதரத்தினமும் உப்பு சத்யாகிரகத்தை அரங்கேற்றினர். சென்னை மகாணத்தில் ராஜாஜியின் வீட்டிலிருந்தபோது தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட அறிவிப்பை முதன் முதலாக அறிவித்து அதற்கான மாபெரும் பொதுக்கூட்டத்தையும் சென்னையில் நடத்தினார் காந்தி.